இன்று (15.03.2017) காலை 9.45 மணியளவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கல்லணைச் செல்லும் சாலையில் திருவளர் சோலை அருகே அரசு மணல் குவாரி முன்பு போலிசார் குவிக்கப்பட்டனர். மணல் குவாரி முற்றுகை போராட்டம் நடைப்பெற இருப்பதாக வந்த தகவலையடுத்து மணல் குவாரிக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருவளர் சோலை மற்றும் பனையபுரம் வழியாக கல்லணைச் செல்லும் சாலையில் காவிரி ஆற்றில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக இயந்திரங்களை கொண்டு இரவு பகலாக அரசு மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும் தமிழக அரசு மீது கோபத்தில் உள்ளனர்.
விவசாயிகளும், அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மக்களைத் திரட்டி போராடவும், அரசு மணல் குவாரியை முற்றுகையிடவும் தயாராகி வருகின்றனர். இவ்விசயத்தில் இனி மாவட்ட அரசு நிர்வாகத்தை நம்பி பயனில்லை.
எனவே, இப்பகுதியை நேரில் பார்வையிட்டு மேலணை (முக்கொம்பு) முதல் கல்லணை வரை சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இனி இயங்காது என்ற உறுதியை தாங்கள் அளித்தால் விவசாயிகளும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும் நிம்மதி அடைவார்கள். போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று, இதற்கு முன்பு தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கும், தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், தமிழக அரசு செயலாளர்களுக்கும், நமது “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தின் ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் பல முறை புகைப்பட ஆதாரத்துடன் கடிதம் அனுப்பி இருந்தார்.
அக்கடிதத்தின் உண்மை நகல் மற்றும் புகைப்படங்கள் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
அரசு மணல் குவாரியால் ஏற்படும் ஆபத்து
காடாகக் காட்சியளிக்கும் காவிரி
ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய நமது அரசாங்கம், மணல் அள்ளுவதாகச் சொல்லி ஆறுகள் அனைத்தையும் பாலைவனமாக மாற்றி வருவது எந்த வகையில் நியாயம்?
குடி மராமத்து முறையை தொடங்கியிருக்கும் நமது தமிழக அரசு முதலில் ஆறுகளை பாதுகாத்து பராமரிக்க முன்வரவேண்டும். இல்லையென்றால், நமது அடுத்த தலைமுறை அவற்றை வரைப்படத்தில் தான் பார்க்க வேண்டி வரும்.
-ஆர்.அருண்கேசவன், -கே.பி.சுகுமார்.