சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் (வயது 27) இவர் 18.03.2017 இரவு 1.40 மணிக்கு சென்னை பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி. நகர் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து மனைவி நிவேதிதாவுடன் தனது பி.எம்.டபிள்யூ காரில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
இவர் கார் பந்தய வீரர் என்பதால் காரை மின்னல் வேகத்தில் ஓட்டியுள்ளார். பட்டினப்பாக்கம் அம்பேத்கர் மணி மண்டபம் எதிரில் கார் சென்று கொண்டிருந்தபோது, கார் திடீரென சாலை தடுப்பில் மோதி கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரமாக இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் அஸ்வினும், நிவேதிதாவும் உயிர் பிழைக்க வழியின்றி காருக்குள்ளேயே உடல் கருகி பலியானார்கள்.
இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததாலும், கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததாலும், அவர்களை யாரும் காப்பாற்ற முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து உருக்குலைந்து போனது. காருக்குள் அஸ்வினும், நிவேதிதாவும் கரிக்கட்டையாக கிடந்தனர்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து பிரிவு போலீசார் இருவரின் உடலைகளையும் மீட்டு ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அஸ்வினும், நிவேதிதாவும் காதலித்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்கள். நிவேதிதா ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
“யானைக்கும் அடி சறுக்கும்; அதிவேகம் ஆபத்தை விளைவிக்கும்” என்பது அஸ்வின் வாழ்க்கையிலும் நிரூபனமாகியுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.