திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழமுல்லக்குடி ஊராட்சி, புத்தாபுரம் கிராமத்தில் வசித்து வரும் காத்தான், அஞ்சலை தம்பதியின் மகன்கள் அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நில அளவை சான்றிதழ் வழங்காத திருவெறும்பூர் தாசில்தாரை கண்டித்து, திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இன்று (23.03.2017) காலை குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான போலிசார், உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்தனர்.
சரி, இந்த பிரச்சனைக்கு என்னதான் காரணம்?
மயானத்திற்கு செல்வதற்கு அரசு செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழியாக நாங்கள் பிணத்தை கொண்டு செல்லமாட்டோம். மேற்படி அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள வீட்டு வாசல்படி வழியாகதான் பிணத்தை கொண்டு செல்வோம் என்று அடம்பிடிக்கும் புத்தாபுரம் மற்றும் பாப்பாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கு, திருவெறும்பூர் தாசில்தார் உடந்தையாக இருந்து தனிப்பட்ட ஆதாயத்திற்காக செயல்பட்டு வருகிறார் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு.
கீழ்காணும் ஆவணங்களை பார்வையிட்டாலே உண்ணாவிரதத்திற்கான உண்மையான காரணமும், அப்பாவி மனிதர்களை எந்த அளவிற்கு தலைமை நில அளவையாளர் கார்த்திக் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் ஆகியோர் ஏமாற்றி அலைகழித்துள்ளனர் என்பது தெளிவாக விளங்கும்:
–கே.பி.சுகுமார்.