அஞ்சல் ஊழியருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில் முறைகேடு; மத்திய இணை அமைச்சருக்கு, மு.க. ஸ்டாலின் கடிதம்.

mksmk stalin lr mk stalin lr2

மாண்புமிகு அமைச்சர் மனோஜ் சின்ஹா அவர்களுக்கு, வணக்கம்.

கடந்த 11.12.2016 அன்று நடந்த அஞ்சல் ஊழியருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில், மதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகள் நிகழ்ந்து, அதனால் தமிழ்நாட்டை சேர்ந்த பல ஆர்வமிகு மாணவர்களின் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் விரும்பத்தகாத சூழலை உங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அஞ்சல் துறையால் நடத்தப்படும் இந்த தேர்வு திட்டத்தில் வழங்கப்படும் 100 மதிப்பெண்களில், தமிழ் மொழிக்கு ஒரு மதிப்பெண் கேள்விகளில் 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுவது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்நிலையில், ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள், அதாவது 25-க்கு 24 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பற்றி தமிழ்நாடு மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஹரியானாவை சேர்ந்த ஒரு மாணவர், தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் திறமையின் அடிப்படையிலும், பிழையேற்படுத்தாத மதிப்பீடுடனும், முறையாகவும் அதிக மதிப்பெண்கள் பெறுவதை காணும் போது இந்த உலகில் அதிக மகிழ்ச்சி கொள்பவன் நானாகவே இருப்பேன். அதேநேரம், தவறான மதிப்பீடும், முறைகேடுகளாலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவர் பாதிக்கப்பட்டால் அது என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தும்.

ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக தமிழ் மொழியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் தேர்வெழுதிய தமிழக மாணவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் மீதும் அவர்கள் உளப்பூர்வமான புகாரை தெரிவிக்கிறார்கள்.

தேர்வு முறையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரச்சாரம் செய்கின்ற வேளையில், இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்களை நீங்கள் தீவிர கவனத்தில் கொண்டு, அஞ்சல் துறையின் நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில் நம்பிக்கையை ஏற்படுத்துவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த நாட்டின் இளைஞர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ்நாட்டை சார்ந்தவர்களாயினும் இப்பெருமை மிகு நாட்டின் சொத்துகள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

ஆதலால், நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையின் எந்த பணியமர்த்தும் நடைமுறையிலாவது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையில் குறைபாடுகள் ஏற்படின் அது அவர்களின் எதிர்காலத்தை ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கும் அளவு தீங்கை உண்டாக்கும்.

வேலையின்மை பிரச்சனை இளைய தலைமுறையினரை அச்சுறுத்தி வரும் சூழலில், அஞ்சல் ஊழியருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில், ஹரியானா மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, வேலை கிடைக்குமென்ற பெரும் நம்பிக்கையில் தேர்வு எழுதியுள்ள வேலையில்லாத தமிழக இளைஞர்களுக்கு நீதியினை பெற்றுத்தர வேண்டும் என்று உங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 –டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com