இலங்கை வவுனியாவில் சின்ன டம்பன் மற்றும் புளியங்குளம் பகுதியில் உள்ள ஞானம் நகர் ஆகிய இடங்களில், வீடற்ற தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 150 வீடுகளை லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் தனது தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அம்மாள் பெயரில் அமைக்கப்பட்டுள்ள “ஞானம் பவுண்டேஷன்” சார்பில் கட்டி முடித்துள்ளார்.
ஞானம் பவுண்டேஷன் மூலம் கட்டி முடிக்கப்பட்ட 150 வீடுகளை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணம் நகரில் நடக்க இருக்கிறது.
இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் நேரில் வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று லைகா நிறுவனத்தின் தலைவரும், ஞானம் பவுண்டேஷன் நிறுவனருமான சுபாஷ்கரன், நடிகர் ரஜினிகாந்த்திடம் கேட்டு கொண்டதின் பெயரில்தான் இந்த விழாவிற்கு கட்டாயம் வருகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் வாக்கு கொடுத்து இருந்தார்.
அதன் அடிப்படையில் ரஜினிகாந்த்தின் இலங்கை வருகை குறித்து லைகா நிறுவனம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு செய்தி அறிக்கையும் வெளியிட்டு இருந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவது இது தான் முதல் முறை என்று பெருமையோடு குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் தனது மதிப்பிற்குரிய நண்பர்கள் தொல்.திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோரின் அன்பு வேண்டுகோளை ஏற்று தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தை இலங்கைக்கு செல்லக்கூடாது என்று சொல்வதற்கு தொல்.திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோருக்கு எந்த தகுதியும் கிடையாது.
குறிப்பாக, இலங்கை அலரி மாளிகையில் மகிந்த ராஜபட்சேவுடன் கைகுலுக்கி, விருந்து உண்டு, மகிந்த ராஜபட்சேவின் கையாலே பரிசு வாங்கி வந்த தொல்.திருமாவளவன் இலங்கையை குறித்து பேசுவது அவர் “மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்” என்பதை முதலில் உணர வேண்டும்.
கீழ்காணும் வீடியோவே அதற்கு சான்று:
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம், சர்வதேச தரகர் சுப்ரமணிய சுவாமி ஆகியோர் அரசு விருந்தாளியாக சென்று இலங்கை அரசாங்கத்தின் இராணுவ கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தபோது இந்த வைகோ, வேல்முருகன் எல்லாம் செவ்வாய் கிரகத்திலையா இருந்தார்கள்? அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டியதுதானே?
நடிகர் ரஜினிகாந்த்தை மட்டும் மிரட்டுவது எந்த வகையில் நியாயம்?
இதனால் லைகா நிறுவனத்திற்கு ஏமாற்றமோ இல்லையோ; நடிகர் ரஜினிகாந்த்தின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி இருந்த இலங்கை தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இது நடிகர் ரஜினிகாந்த்திற்கு பெருத்த அவமானம்.
ரஜினி ஒரு குழப்பவாதி, முடிவெடுக்க தெரியாதவர், எடுத்த முடிவில் அவர் எப்பொழுதும் உறுதியாக இருக்கமாட்டார், அவர் முதுகெலும்பு இல்லாத மனிதர்… என்ற விமர்சனங்கள் நடிகர் ரஜினிகாந்த் மீது மறுபடியும் பதிவாவதற்கு இச்சம்பவம் ஒரு காரணமாகிவிட்டது.
எனவே, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியும், நன்மையும் ஏற்படுமானால் திட்டமிட்டபடி நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் இலங்கை செல்ல வேண்டும்.
இல்லையென்றால்,
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்.
– என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பழிச்சொல்லுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளாக வேண்டி வரும்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com