முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றவர்களுடைய அடிப்படைத் தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் 2010-ம் ஆண்டு முதல் உயிரிழை எனும் அமைப்பானது இலங்கை வவுனியாவை தளமாக கொண்டு செயற்பட்டு வருகின்றது.
விபத்துக்கள், போர், நோய், இயற்கையனர்த்தம் போன்றவற்றினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட போதிலும், 2009-ல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரினால் அதிகளவானவர்கள் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த அமைப்பானது இனம், மதம், பிரதேச வேறுபாடுகளின்றி உயிரிழை உறுப்பினர்களுடைய நலனிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும், சுயாதினமாக செயற்படும் ஒரு அமைப்பாகும்.
உயிரிழை அமைப்பானது மாவட்ட ரீதியாக பின்வரும் எண்ணிக்கையிலான பயனாளிகளை தன் கவனிப்பில் கொண்டுள்ளது.
கிளிநொச்சி – 46 (ஆண்கள் – 36 பெண்கள்- 10), முல்லைத்தீவு – 50 (ஆண்கள் -37 பெண்கள்- 13), யாழ்ப்பாணம் – 37 (ஆண்கள்- 26 பெண்கள் – 11), வவுனியா – 24 (ஆண்கள் – 22 பெண்கள்- 02), மன்னார் – 12 (ஆண்கள்- 08 பெண்கள் -04), திருகோணமலை – 07 (ஆண்கள் – 05 பெண்கள்- 02), மட்டக்களப்பு – அம்பாறை – 14 (ஆண்கள்- 13 பெண்கள்- 01) என்றவாறாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில், உயிரிழை அமைப்பின் செயற்பாடுகளை விரிவாக்கும் நோக்கில், உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் நிர்வாக மற்றும் தொழில் பயிற்சி கட்டட திறப்புவிழா இன்று (30.03.2017) காலை 11.00 மணிக்கு மாங்குளம் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், சாந்தி யோகேஸ்வரன், மருத்துவர் சத்தியமூர்த்தி, சமய முதல்வர்கள், சமூக ஆர்வலர்கள், உயிரிழை அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கட்டடம் கனேடிய தமிழ் மக்களின் பங்களிப்பிலும், பிராம்டன் தமிழ் ஒன்றிய ஒருங்கிணைப்பிலும் ரூ.55 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தினை இலங்கைக்கான கனேடிய தூதுவர் சேர்லி விட்டிங் கடந்த 22.03.2017 அன்று நேரில் பார்வையிட்டு வெகுவாக பாராட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-என்.வசந்த ராகவன்.