‘ஐ.என்.எஸ் சென்னை’ இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
மேற்கு கடற்படை கட்டுப்பாட்டில் இக்கப்பல் இயங்குகிறது. உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட இக்கப்பல், 163 மீட்டர் நீளமும், 7,500 டன் எடையும் கொண்டது. அதிநவீன கப்பலில் தரை இலக்கை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் மற்றும் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் பராக்-8 ஆகிய இரண்டு ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளன.
இது தவிர 2 ஹெலிகாப்டர்களும் கப்பலில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். எதிரிகள் நீர் மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தினாலும், அதை அழிக்கும் திறன் கொண்டது.
இந்த கப்பலின் சின்னத்தில் நீலநிறக்கடலும், பின்னணியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பெயரால் அழைக்கப்படும் முதல் கடற்படை கப்பல் இதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இந்த போர் கப்பல் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலை தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
-ஆர்.மார்ஷல்.