தமிழகத்தில் நகரம் முதல் கிராமங்கள் வரை கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழைக் காலங்களில் முறையான நீர்சேமிப்பு முறைகளைக் கையாளவில்லை. அதனால் கிராமங்களில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் அவலநிலை உள்ளது.
தற்போது கோடைகாலம் என்பதால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இச்சூழ்நிலையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொண்டால் வரும் காலங்களில் அதிக கொள்ளளவு தண்ணீரை சேமிக்க முடியும். இப்பணிக்கு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பணியாளர்களை பயன்படுத்துவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் வழிபிறக்கும்.
எதிர்காலத்தில் மழை வெள்ளத்தால் கிடைக்கும் உபரிநீர் கடலில் கலக்காமல் தடுக்க தடுப்பணைகளை காலம் தாழ்த்தாமல் கட்ட வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கு ஆழ்துளை கிணறுகளையும், நீர்த்தேக்க தொட்டிகளையும் அமைக்க வேண்டும். அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரங்களில் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை கட்டாயமாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி, பொதுப்பணித் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
-கே.பி.சுகுமார்.