இந்தியாவில் மிகவும் முக்கியமான நபர்களின் (VIP) கலாச்சார சின்னமாக திகழும் சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை இனி யாரும் தங்கள் வாகனங்களில் பயன்படுத்த கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதனால் இந்திய குடியரசுத் தலைவர் முதல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை நீதிபதிகள் உட்பட இனி யாரும் தங்கள் கார்களில் சைரன்களை பயன்படுத்த கூடாது.
ஆனால், அவசர மற்றும் நிவாரண சேவைகளில் ஈடுப்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் சைரன்களை வழக்கம் போல பயன்படுத்தலாம்.
இது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்தி. இதற்காக மத்திய அரசை உண்மையிலுமே பாராட்டலாம்.
ஆனால், ஆம்புலன்ஸ் வாகனங்களில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே சமயம் சுப்ரமணிய சுவாமி போன்ற சர்வதேச தரகர்களுக்கு அரசு செலவில் வழங்கப்படும் உயரிய பாதுகாப்பை மத்திய அரசு மறுப்பரிசீலனை செய்து உடனடியாக திரும்ப பெற வேண்டும். உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் மற்றவர்களை வசைப்பாடுகிறார். அதனால்தான், பிரதமருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் குப்பைத் தொட்டிக்குதான் செல்கிறது என்கிறார், தமிழர்கள் அனைவரையும் பொருக்கி என்கிறார்… இப்படிப்பட்ட நபருக்கு இந்திய மக்களின் வரி பணத்தில் பாதுகாப்பு! இதை விட வெட்ககேடு வேறு என்ன இருக்க முடியும்?
மேலும், மத்திய, மாநில அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவர்களின் சொந்த வேலைக்காகவும், தனிப்பட்ட தேவைக்காகவும், அரசு பணியாளர்களை அடிமையாக நடத்தும் அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்களுக்கு பணியாற்ற வேண்டிய காவல்துறையினரும், அரசு பணியாளர்களும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் மற்றும் உயர் அதிகாரிகளின் நிர்பந்தத்திற்காகவும் வேறு வழியின்றி உயர் அதிகாரிகளின் வீடுகளில் அடிமை வேலை செய்து வருகின்றனர்.
உதாரணமாக, ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி வீடு என்றால், நாயை குளிப்பாட்டுவது, தோட்ட வேலை செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, கடைகளுக்கு சென்று காய்கறி வாங்குவது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் வெளியில் சென்றால் பாதுகாப்புக்கு செல்வது….. மற்றும் இங்கு எழுத்தில் பதிவு செய்ய முடியாத பல அந்தரங்க வேலைகள் செய்வதற்கென்றே காவல்துறையை சேர்ந்தவர்கள் சுமார் 40 முதல் 60 நபர்கள் வரை பணியில் இருக்கிறார்கள்.
இப்படி காவல்துறையினரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பலம் அனைத்தும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குமே சென்று விடுகிறது. அதனால்தான் நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன. பல இடங்களில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கின்றன.
இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்காதவரை வி.ஐ.பி. கலாச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com