பாகுபலி-2 பட வெளியீடுக்காக, கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சத்யராஜ்!- வீடியோ.

SATHIYA RAJ F

SATHIYA RAJ

வணக்கம்.

ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ் படங்கள் திரையிடுவதை நிறுத்தச்சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகின் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

அதற்கு எதிர்வினையாக என்னுடைய கொடும்பாவி, உருவ பொம்மைகள் கர்நாடகாவில் எரிக்கப்பட்டன. அதேவேளையில், கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கர்நாடக திரைப்பட கலைஞர்களும் ஆவேசமாக பேசினார்கள். அப்படி நான் பேசியபோதே என்னுடைய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன்.

நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே, 35 வருடங்களாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம். கடந்த 9 வருடங்களில் ‘பாகுபலி’ பாகம் 1 உள்பட நான் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. எந்த பிரச்சினையும் எழவில்லை.

சில கன்னட படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை. 9 வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த கண்டன கூட்டத்தில் நான் பேசிய அந்த வீடியோ பதிவை யூடியூப்பில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்களின் மனம் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும் அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு நான் கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கும், என் நலம் விரும்புபவர்களுக்கும் என்மீது வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும், பணமும் விரயம் ஆவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமில்லாது, கர்நாடகா மாநிலத்திற்கு ‘பாகுபலி-2’ ஆம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குனர் ராஜமௌலி அவர்கள் டுவிட்டரில் கூறிய விளக்கத்தின் மூலமாக தெளிவாக தெரியும். ஆனாலும், இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்சினையாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சினையானாலும் சரி, விவசாயிகள் பிரச்சினையானாலும் சரி, தமிழக மக்களின் நலம் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத்தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

இப்படி நான் கூறுவதால் இந்த சத்யராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண, சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யவேண்டாம், என்னால் நஷ்டமடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், ஒரு நடிகனாக இருப்பதைவிட, இறப்பதைவிட எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 ஆம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் உணர்வுகளை புரிந்துகொண்டு எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ் மக்கள், தமிழ் உணர்வாளர்கள், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், என் நலவிரும்பிகள் என அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் சோபு, பிரசாத் மற்றும் ‘பாகுபலி’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் தமிழ் திரையுலகின் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ நமது வாசகர்களின் பார்வைக்காக இதோ இங்கு பதிவு செய்துள்ளோம். 

கூத்தாடிகளுக்கு கோபமும் வரக்கூடாது; கொள்கையும் இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. கடைசி வரை கோமாளியாகவே இருப்பதுதான் அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com