ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதற்காக தங்கள் தரப்பிலான ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர்கள் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் மற்றும் மூத்த அதிகாரிகள் கடந்த மார்ச் 22–ந் தேதி இரு தரப்பினரையும் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கோ ஒதுக்குவது இல்லை என்றும், அந்த சின்னத்தை முடக்கி வைப்பது என்றும் அப்போது இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
மேலும், இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது பற்றி முடிவு எடுக்க வசதியாக, இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 17–ந் தேதிக்குள் கொடுத்து முறையிடலாம் என்றும் கூறியது.
இந்நிலையில், தங்கள் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 17–ந் தேதியில் இருந்து 8 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.(அம்மா) அணியின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதேபோல் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) தரப்பிலும், ஆதாரங்களை தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் கோரப்பட்டது.
இதை பரிசீலித்த இந்திய தேர்தல் ஆணையர்கள் இரு தரப்பினரும் தங்கள் தரப்பு ஆதாரங்களையும், பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்ய ஜூன் 16–ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை, ஏற்கனவே மார்ச் 22–ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி இரு தரப்பினருக்கும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com