நடிகர் தனுஷ் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கியுள்ள 18 பக்கங்கள் கொண்ட தீர்ப்புரையில் 3-ஆம் பக்கமும், 12-ஆம் பக்கமும் தமிழ் மொழியில் ஒரு சில வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் எழுத்து பிழை ஏராளமாக இருக்கிறது.
இதோ அதற்கான ஆதாரம்:
பள்ளி கல்லூரிகளில் தேர்வுதாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு இருக்கும் அறிவுகூட, நீதிதுறை பதிவாளர்களுக்கு இல்லையா? ஆசிரியர்கள் தவறு செய்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம். நீதிதுறையே தவறு செய்தால் வேறு எங்கே போய் முறையீடுவது?
நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளில் வாதி மற்றும் பிரதிவாதிகளின் வாழ்க்கை மட்டுமல்ல; அவர்களின் வருங்காலமும், மானமும், உயிரும் அடங்கியிருக்கிறது என்பதை மாண்புமிகு நீதிபதிகள் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில் நீதியை நிலை நாட்டினார்களோ? இல்லையோ? அது நமக்கு தெரியாது. ஆனால், நமது தாய் மொழியான தமிழ் மொழியை கொலை செய்து இருக்கிறார்கள். இதற்கு இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக பணியாற்றியவர் கதிரேசன் (60). அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002-ம் ஆண்டு பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் நடிகர் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் கதிரேசன் மீனாட்சி தம்பதி மதுரை மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில் மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கூறியிருப்பது அனைத்தும் தவறானது. எனவே அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் தனுஷ் கூறியிருந்தார்.
கதிரேசன், மீனாட்சி தம்பதியின் மகனாக தனுஷ் இருக்க முடியாது என்றும், கதிரேசன் தம்பதியர் தரப்பில் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் பரிசீலித்தபோது கதிரேசன் தம்பதியரின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை என்றும், இதனால் இந்த வழக்கை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும், கதிரேசன் தம்பதியரின் மகன் உண்மையில் காணாமல் போய் இருக்கலாம் ஆனால், அவர் தான் தனுஷ் என்று கூற முடியாது.
எனவே கதிரேசன் தம்பதியரின் வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் தனுஷின் மனு ஏற்கப்படுகிறது. தனுஷிற்கு எதிராக மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன் தம்பதியர் தொடர்ந்துள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட துணை மனுக்கள் முடிக்கப்படுகின்றன என்று தனது உத்தரவில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதற்குப் போதிய ஆதாரம் உள்ளது. அவரைப் பதினோறாம் வகுப்பு வரை நான் படிக்க வைத்தேன். இந்நிலையில், அவரது தற்போதைய சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, உண்மையான பெற்றோராகிய எங்களை, அவரது பெற்றோர் இல்லை என்று மறுத்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றுகள் போலியானது.
இத்தகைய சூழலில், மரபணுச் சோதனை நடத்தினால் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். எனவே, எனக்கும், நடிகர் தனுஷுக்கும் மரபணுச் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல்செய்து இருந்தோம்.
ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை என்று கதிரேசன் தம்பதியர் பகிரங்கமாக தங்கள் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என, தனது உத்தரவில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட்டதா? ஒரு பக்க சார்பாக வழங்கப்பட்டதா? என்பதைப் பற்றி விமர்சனம் செய்வது இச்செய்தியின் நோக்கம் அல்ல. தீர்ப்பு குறித்து பொது வெளியில் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்படும் பட்சத்தில் இந்த தீர்ப்பு சரியா, தவறா? என்பதை உச்ச நீதி மன்றம் முடிவு செய்யும்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com