டெல்லியில் பிரதமர் தலைமையில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் 41 நாளாக ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தனர். விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
அப்போது பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு, பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டும், தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வருக்கு விளக்கினார்.
அதை தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, நதிகள் இணைப்பிற்கு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தும் என்றும், வங்கி கடன் ரத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வழி செய்வேன் என்றும், வறட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என உறுதியளித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி எங்களை அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வைத்து, எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூற வழியமைத்து கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.