சத்தீஸ்கார் மாநிலம், சுக்மா மாவட்டத்தின் காலா பாதார் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த பணியாளர்களுக்கு, சி.ஆர்.பி.எப். படையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இன்று (24.04.2014) மதியம் உணவு இடைவேளையின் போது சி.ஆர்.பி.எப். படையினர் உணவு உட்கொள்ள குழுவாக கூடி தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு கும்பலாக வந்த 300- க்கும் மேற்ப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஏகே 47, மற்றும் தானியங்கி துப்பாக்கியால் சி.ஆர்.பி.எப். படையினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 25 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நூற்றுக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனால், வீரர்களின் பலி எண்ணிக்கை 60-க்கும் மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலுக்கு பிறகு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். படையினரை ஹெலிகாப்டரில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சமீபத்தில் திருமணம் முடித்த கே.கே. தாஸ் என்ற உதவி ஆய்வாளரும் இத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டார் என்பது நெஞ்சை உருக்கும் தகவலாக உள்ளது.
இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட நக்சலைட்டுகள் மீது அதிரடி தாக்குதல் நடத்த அருகில் உள்ள முகாம்களில் இருந்து மேலும் ஏராளமான சி.ஆர்.பி.எப். படையினர் காலா பாதார் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் இந்தியாவையே பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.