வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) நோட்டிஸ்.

Sri-Sri-Ravi-Shankar

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லியில் யமுனை ஆற்றின் வெள்ளச் சமவெளி பகுதியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்த திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். யமுனா நதியின் சுமார் 1000 ஏக்கர் வெள்ள சமவெளி அழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படும். எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

விசாரணைக்கு பிறகு 09.03.2016 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) தீர்ப்பு வழங்கியது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவரும் வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்த நீதிபதி, மத்திய மற்றும் டெல்லி மாநில அதிகாரிகளிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.

நதியை அசுத்தமாக்கும் கழிவுகளை யமுனாவில் திறந்துவிடக்கூடாது, மேற்கொண்டு நதியின் சுற்றுச் சூழலை பாதிக்கும் எவ்வித கட்டுமானங்களையும் ஏற்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து கட்டுமான பணிகளில் உதவி வரும் டெல்லி நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வருங்காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

09.03.2016 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) வழங்கிய தீர்ப்பின் முழு விபரம் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

NGT01 NGT02 NGT03

NGT04 NGT05 NGT06

ஆனால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அபராதத் தொகையை முழுவதும் செலுத்தாமல் இழுத்தடித்ததோடு மட்டுமில்லாமல், “யமுனா நதி மிகவும் பரிசுத்தமானது என்று நினைத்திருந்தால் அங்கு நிகழ்ச்சி நடத்தவே எங்களுக்கு அனுமதி அளித்திருக்கக் கூடாது” என்று தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகளிடமே எகத்தாளமாக பேசினார்.

எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு  எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து வரும் மே மாதம் 9-ம் தேதிக்குள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பதிலளிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com