ஊழல்வாதிகள் மீதான புகார்களை விசாரித்து தண்டணை வழங்க தேசிய அளவில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்க லோக்பால் சட்டம் வழிவகை செய்கிறது. லோக்பால் மசோதா 2013–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2014–ம் ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், இது நாள்வரை லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கவில்லை.
இந்நிலையில் ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் லோக்பால் அமைப்பின் தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் விசாரித்தனர்.
2013–ம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு, 2014–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டும், மத்திய அரசு வேண்டுமென்றே லோக்பால் தலைவர், உறுப்பினர்களை நியமிக்கவில்லை என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அப்போது வாதிட்டார்.
லோக்பால் சட்டத்தின்படி எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கான இலக்கணம் பற்றிய திருத்தங்கள், பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போதைய சூழலில் லோக்பால் அமைப்பிற்கான நியமனங்களை செய்ய முடியாது என அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி விளக்கம் அளித்தார்.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் 27.04.2017 அன்று தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, லோக்பால் சட்டத்தை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தாமதிப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com