தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை மே 25 ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்ய வேண்டும்: தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

dmk dmk1தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. சட்டப்பேரவைச் சரித்திரத்தில் வைர விழா காணும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டது.            
  1. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்களை வரவேற்றும், கடந்த 25 ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. 
  1. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும்; நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். தமிழக மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களிடத்தில் எடுத்துச் சொல்கின்ற வகையில் மாவட்டந்தோறும் கருத்தரங்குகள் நடத்த வேண்டும். 
  1. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  1. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மூடப்படும் மதுக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தாமதமின்றி மாற்று வேலை வேண்டும். 
  1. தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை மே 25 ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்ய வேண்டும். 
  1. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்து தமிழக விவசாயிகளின் காவிரி உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

 -எஸ்.திவ்யா.