கார் – பஸ் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி; பெங்களூரில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

CGM IMAGE 01

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கார் – பஸ் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியானார்கள்.

பெங்களூரில் இருந்து மேல்மருவத்தூருக்கு மஞ்சுநாதன் (வயது57), அவரது மகன் சஞ்சய்(வயது 16), உறவினர் பன்னீர்செல்வம்(வயது 48) காரில் வந்துள்ளனர். காரை டிரைவர்  ரகு (வயது28) ஓட்டியுள்ளார். இன்று விடியற்காலை 3 மணியளவில் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலை கருமாங்குளம் அருகே கார் வந்தபோது ஓட்டுநர் ரகுவின் கட்டுப்பாட்டை இழந்து கார் கர்நாடக அரசு பஸ் மீது மோதியது.

அதில் பலத்த காயமடைந்த ரகு, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பலியானரகள். படுகாயமடைந்த மஞ்சுநாதன், சஞ்சய் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்செங்கம் போலீசார், இறந்துபோன டிரைவர் ரகு, பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து மேல்செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-செங்கம் சரவணக்குமார்.