கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 19–வயது மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தார். அப்போது அங்கிருந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த மாணவியை சோதனை செய்தார். மெட்டல் டிடெக்டரை, மாணவியின் மேல் உள்ளாடைக்கு அருகே கொண்டு சென்ற போது அதில் ‘பீப்’ சத்தம் கேட்டது. இதனால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்றும்படி கூறினார்.
அதற்கு மாணவி, உள்ளாடையில் இரும்பு கொக்கி இருப்பதால்தான் சத்தம் கேட்பதாக விளக்கம் அளித்து உள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த கண்காணிப்பாளர் உள்ளாடையை அகற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனையடுத்து அந்த மாணவி வேறுவழியின்றி தனது உள்ளாடையை கழற்றி அவரது தாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.
இச்சம்பவத்திற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உடனே கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கேரள மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. கேரள சட்டசபையிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். முழு விசாரணையை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் இரு நபர் குழுவை அமைத்து உள்ளது.
-எஸ்.திவ்யா.