சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த கர்ணன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தபோது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
நீதித்துறையில் ஊழல் நடப்பதாக குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். கொல்கத்தாவுக்கு மாறுதல் ஆன பிறகும் அவருடைய அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணன் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகுர், பி.சி.கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதனால் மார்ச் 31-ந்தேதி அவர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரான உத்தரவுகளையே தொடர்ந்து நீதிபதி கர்ணன் பிறப்பித்து வந்தார்.
இதனால், அவர் மீது அதிருப்தி அடைந்த 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அவரது மனநிலை குறித்து மே 4-ந்தேதி மனநல பரிசோதனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் தன் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், தன் மீதான மனநல பரிசோதனைக்கு மறுத்த கர்ணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்பட 7 நீதிபதிகள் மற்றும் தன்னை நீதிபதியாக பணியாற்ற தடை விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.
அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் செய்தார். இந்த தொகையை செலுத்தாவிட்டால், மேலும் 6 மாதங்கள் தண்டனையை 8 நீதிபதிகளும் அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.
அவருடைய இந்த நடவடிக்கை இந்திய நீதித்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு முன்பாக 09.05.2017 விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் தன்னுடைய வாதத்தில், நீதிபதி கர்ணன் மருத்துவ பரிசோதனைகளுக்கு உடன்படவில்லை என்றும், தொடர்ந்து அவர் பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிவித்தார். மேலும், தான் என்ன செய்கிறோம் என்பது கர்ணனுக்கு தெரியும். உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தால் தனக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதும் அவருக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார்.
நீதிபதி கர்ணனின் சமீபகால நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவேதி, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக மருத்துவ குழுவுடன் மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி. மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்றபோது நீதிபதி கர்ணன் நல்ல மனநிலையிலும், உடல் நலத்துடனும் இருந்தார்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “மருத்துவக்குழு அவருக்கு எதிராக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாததால் அவர் சரியான மனநிலையில்தான் இருக்கிறார் என்று இந்த நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது” என்று கூறினர்.
உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆர்.எஸ்.சூரி கூறுகையில், “நீதிபதி கர்ணனின் செயல்பாடுகள் மன்னிக்க முடியாத தன்மை கொண்டவை. இதனால் மிகவும் கடுமையான தண்டனைக்கு அவர் உரியவர் ஆகிறார்” என குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “ஒரு நீதிபதி மீது இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்குமா? கர்ணன் விரைவில் (ஜூன் 11-ந்தேதி) பதவி ஓய்வுபெறுகிறார். இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அது உச்ச நீதிமன்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? எனவே, அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று ஆலோசனை தெரிவித்தார்.
ஆனால், இந்த கருத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுப்பதால் எழக்கூடிய பிரச்சினைகளை விட நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எழக்கூடிய பிரச்சினைகளையும் நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்கிறது. தற்போது அவரை நாங்கள் நீதிபதியாக பார்க்கவில்லை. ஒரு சாதாரண குடிமகனாகவே பார்க்கிறோம்.
மேலும், இதில் நீதிபதி, சாதாரண மனிதன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க முடியாது. நீதிமன்றத்தை அவமதிப்பவர், அவர் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும். நீதிமன்றத்தையும், நீதித்துறை நடைமுறைகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் அவர் தொடர்ந்து அவமதித்ததாக உச்ச நீதிமன்றத்தின் இந்த அமர்வு ஒருமனதாக கருதுகிறது.
எனவே, அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அவரை மேற்கு வங்காள டி.ஜி.பி. உடனடியாக கைது செய்யவேண்டும்.
இந்தியா முழுவதும் ஊடகங்கள் நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. மீறி வெளியிடுவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஆகும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பியதற்கு சமம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com