இந்திய பிரதமர் நரேந்திரமோதிக்கும், இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையிலான சந்திப்பு 12.05.2017 மாலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைப்பெற்றது.
அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே செல்கின்றது. 2016-ஆம் ஆண்டிற்குள் தீர்வு வருமென்று எதிர்பார்த்திருந்தோம். இந்த வருடத்திற்குள்ளாவது ஒரு தீர்வு வரவேண்டும். வடகிழக்கு தமிழர்கள் பாரம்பரியமாக, பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்கள். இங்கு சமஸ்டி அமைப்பின்கீழ் ஒரு நியாயமான தீர்வு வரமுடியும். அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக கூறப்போனால், ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் எடுக்கும் நிலைமையையே காணமுடிகின்றது.
ஆகவே, குறைந்தது காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களாவது இருக்க வேண்டும். அத்துடன் காணாமல் போனவர்கள் விடயம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை ஆகியவை குறித்தும், இந்திய பிரதமர் நரேந்திரமோதியிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.
மேலும், இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில், இந்தியா பிரத்தியேகமாக பெரியளவில் முதலீடுகளைச் செய்து, வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க உதவ வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.
இவைகள் சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம். இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு விசியத்தில் தாமதித்துக் கொண்டிருந்தால் சர்வதேசம் அழுத்தங்களைக் கொடுக்கும்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் உதவ இருக்கின்றோம். இது சம்பந்தமாக அண்மையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் பேசியுள்ளேன். அத்துடன் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது அழுத்தங்களைக் கொடுத்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் என்று இந்திய பிரதமர் நரேந்திரமோதி உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோதியுடன், இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய தூதர், இந்திய துணை தூதர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-என்.வசந்த ராகவன்.