நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத்தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்களை சந்திப்பதற்காக ரஜினி காலை 9.50 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்துக்கு வருகை தந்தார்.
அப்போது ரசிகர்களிடைய அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது, எனக்கு பலவகையில் வழிகாட்டியாக இருந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். மது, புகை, போதை பழக்கத்திற்கு யாரும் அடிமையாகவேண்டாம். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்று முதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு இல்லை என சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறேன். என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்.
ஏதாவது திரைப்படம் வந்தால் மட்டும் ரஜினி ஏதாவது ஸ்டண்ட் பண்ணுவார் என்று சொல்லுகிறார்கள். ரசிகர் துணையால் அப்படி நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உள்ளது. அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகே கூட சேர்க்கமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
-ஆர்.மார்ஷல்.