இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 52 நாட்கள் சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (25.05.2017) காலை 10.30 மணி அளவில் விடுதலையாகி வெளியே வந்தார்.
கடந்த 03.04.2017 அன்று சென்னை மாநகர 14 ஆவது குற்ற நடுவர் நீதிமன்ற பொறுப்பில் இருந்த கோபிநாத் முன்னிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜரானார். ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யாத நிலையில், 17.04.2017 வரை வைகோவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 17.04.2017 அன்று சென்னை பெருநகர் 14-ஆவது நீதிமன்ற நடுவர் பொறுப்பிலுள்ள நடுவர் கோபிநாதன் வைகோ மீதுள்ள வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டார். 27.04.2017 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வைகோவை ஆஜராகிக் கொள்ளும்படி உத்திரவிட்டார்.
சென்னை புழல் சிறையிலிருந்து வைகோ 27.04.2017 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஸீமா பானு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வைகோ சார்பில் சட்டத்துறைச் செயலாளருக்கு பாஸ்போர்ட் வழங்க ஆட்சேபணை இல்லை என்று உத்திரவு வழங்கும்படி மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி வைகோவுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆட்சேபணை இல்லை என்று உத்திரவு பிறப்பித்தார்.
மேலும், நீதிபதி ஏ. நஸீமா பானு இந்த வழக்கை விசாரணைக்கு 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளதாகவும், வருகிற ஜூன் மாதம் 2-ஆம் தேதி 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் முன்பு வைகோ ஆஜராகும்படியும் உத்திரவிட்டார்.
இந்நிலையில் திடீரென்று 23.05.2017 அன்று வைகோவை பிணையில் விட மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 24.05.2017 அன்று விடுமுறை கால அமர்வு நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைகோ சிறையில் இருப்பதால் அரசுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையுமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வைகோவுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி அவருடைய சொந்த ஜாமினில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் வைகோ சார்பில் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், வழக்கறிஞர்கள் ஆர்.பிரியகுமார், ஆர். செந்தில்செல்வன், ப.சுப்பிரமணி, பாஸ்கர், வினோத்குமார், இளங்கோவன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.
52 நாட்கள் புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்த வைகோ இன்று (25.05.2017) காலை 10.30 மணி அளவில் விடுதலையாகி வெளியே வந்தார்.
வைகோ மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு வருகின்ற 02.06.2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com