திருச்சி – கல்லணை சாலையில் குவளக்குடி– அரியமங்கலம் செல்லும் திருப்பத்தில் மின் கம்பத்தில் இருந்த மின்சார கம்பி ஒன்று இன்று மதியம் 1.15 மணியளவில் காற்றில் அறுந்து சாலை ஓரத்தில் விழுந்தது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அப்பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஏனென்றால், மின்சாரம் பாய்ந்த நிலையிலேயே மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இப்படியே விட்டு விட்டு போனால் ஏதாவது உயிர் பலி ஏற்பட்டு விடும் என்பதால், இதை பார்த்து விட்டு செல்ல மனமில்லாமல் யாருக்கு தகவல் தெரிவிப்பது என்ற குழப்பத்தில், நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் அலைபேசிக்கு தொடர்புக் கொண்டு தகவலை கூறியுள்ளார்.
உடனே, நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின், அரியமங்கலம் பகுதி மின் வாரிய உதவி பொறியாளர் ஆலயமணி என்பவரின் அலைபேசிக்கு தொடர்புக் கொண்டு மேற்கண்ட விபரத்தை தெரிவித்தார்.
ஆபத்தையும், விபரீதத்தையும் உணர்ந்த மின் வாரிய உதவி பொறியாளர் ஆலயமணி, உடனடியாக மின்வாரிய ஊழியர்களை அனுப்பி மின்சாரத்தை தடைச்செய்து, போர்கால அடிப்படையில் காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்தார்.
உரிய நேரத்தில் அந்த நபர் தகவல் தெரிவிக்கவில்லையென்றால் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்.
-கே.பி.சுகுமார்.