குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும்!-சட்டமன்றத்தில் இன்று என்ன நடந்தது? – மு.க.ஸ்டாலின் விளக்கம்.

dmkdmk1dmk2 dmk3 dmk4 dmk5

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்து நீண்ட நாட்களுக்கு பிறகு துறை வாரியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்ய இன்று (14.06.2017) காலை கூடிய சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டோம்.

கேள்வி நேரம் முடிவடைந்து நேரமில்லா நேரத்தில், ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சரவணன், ‘நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.எல்.ஏ க்களுக்கு அ.தி.மு.க வின் இரு அணிகளின் சார்பில் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக’ தெரிவித்து, ஒப்புக்கொண்டிருப்பது குறித்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் அதற்கு அவர் செவிசாய்க்காமல் அனுமதி மறுத்தார்.

நாடு முழுவதும் தமிழகத்தின் மானத்தை கப்பலேற்றிய அதிமுக அரசின் இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வலியுறுத்தினோம். ஆனால் சபாநாயகர் அவர்கள் பேச அனுமதிக்காமல் மறுத்து, எங்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

பின்னர் இந்த அராஜக போக்கை கண்டித்து சட்டப்பேரவை வளாகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களும், எங்களை அவையிலிருந்து வெளியேற்றியதை கண்டித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானோம்.

அப்போது செய்தியாளர்கள் சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கேட்டார்கள், அவர்களிடத்தில் “18-02-2016 அன்று இதே சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, 14 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைதிகளை போல அடைத்து குதிரை பேரம் நடந்திருக்கின்றது என அப்போதே நாங்கள் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஆனால், அப்போது அதனை மறுத்து, காவல்துறையை அவைக்குள் வரவழைத்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் அடித்து, உதைத்து, வெளியில் கொண்டு போய் வீசினார்கள்.

ஆனால் தற்போது, ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சரவணன், கனகராஜ் ஆகியோர் யார் யாருக்கெல்லாம் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் வீடியோ ஆதாரத்தை இரண்டு நாட்களாக இந்த நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காமல் தான், எங்களை வெளியேற்றியிருக்கிறார்கள்.

அதிமுக அரசு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சர்வாதிகாரத்தோடு இந்த ஆட்சி நடப்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

குதிரை பேரம் நடத்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உடனடியாக கலைக்கப்பட்டு, குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.

நிச்சயம் நாளை காலையில் சட்டமன்றத்துக்குச் சென்று, இந்தப் பிரச்சனையை மீண்டும் சட்டப்பேரவையில் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மக்களுக்கு இதன் உண்மை தன்மையை வெளிக்கொணரவும் வலியுறுத்துவோம். இவ்வாறு தமிழக எதிர் கட்சி தலைவர் மு..ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

 -கே.பி.சுகுமார்.

தமிழக எதிர்கட்சி தலைவர் மு..ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் திமுக பிரமுகர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.

IMG-20170613-WA0000

திருவண்ணாமலை மாவட்ட வடக்கு செயலாளர் ஆர். சிவானந்தம் தலைமையில், இன்று மதியம் 2.00 மணி அளவில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு ஆரணி நகர காவல்துறை சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

-மு.ராமராஜ்.