திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி அண்ணா வளைவு, வ.உ.சி.நகரில் புனித வளனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை விட மாணவ, மாணவிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக கடந்த 13-ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்திலும் விரிவாக அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அன்று மதியமே திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் ஷோபா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என்று கூறியதன் அடிப்படையில் போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.
அன்று மதியம் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம், தாசில்தார் ஷோபா பள்ளியில் பெற்றோர்கள் கூடி போராட்டம் நடத்தினால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே, பள்ளி சம்மந்தப்பட்ட புகார்களை எல்லோரும் சேர்ந்து கொடுங்கள். மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் பெற்றோர்கள், தாசில்தாரிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் தாசில்தார் ஷோபா நான் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தராக அடுத்த ஆண்டு இருந்தால் இதுபோல் ஒரு பிரச்சனை வராது என்று பெற்றோர்களிடம் உறுதிகூறி அனுப்பினார்.
இந்நிலையில், தாசில்தாரிடம் புகார் கொடுத்த மனுவில் கையெழுத்து போட்டிருந்த பெற்றோர்களை தனித்தனியே பள்ளி நிர்வாகம் அழைத்து, உங்கள் பிள்ளைகளின் பள்ளி சான்றிதழ்களை வேண்டுமென்றால் பெற்று செல்லுங்கள், எங்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு உங்கள் குழந்தைகள் இந்த பள்ளியில் படிக்கவேண்டாம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் வெகுண்டெழுந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து இன்று (16.06.2017) காலை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக துண்டு பிரசுரம் அடித்து வினியோகித்ததுடன் இன்று காலை போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்த துவாக்குடி இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் சமரசம் பேசினார்கள். அது முடியாமல் போகவே, திருவெறும்பூர் வருவாய் ஆய்வாளர் கீதாவும் சமரசம் பேசினார். அதுவும் முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் விமலா, உதவி ஆய்வாளர் வினோத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் சிலரையும், பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துரோமியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அந்த பேச்சுவார்த்தையில், சிறப்பு வகுப்புகட்டணம் வாங்க கூடாது. நோட்புக் கட்டணம் அதிக அளவில் உள்ளது என்றும், அதனால் அதில் ரூ.1000 குறைக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் பெற்றோர்களே மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகளை வாங்கி கொள்ளலாம் என்றும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பெற்றோர்- ஆசிரியர் சங்கம் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.
-ஆர்.சிராசுதீன்.