இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்தது. அதற்காக நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் கவுன்சில் ஒன்றை அமைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்படி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்று நான்கு வகைகளாக வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தானியங்கள், பால், முட்டை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், பெட்ரோலிய பொருட்களுக்கும், கல்வி, மருத்துவம் ஆகிய சேவைகளுக்கும் சரக்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதேபோல் காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளிலும் சரக்கு, சேவை வரி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று (ஜூலை 1) முதல் இந்தியா முழுவதும் சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி நள்ளிரவு முதல் இந்த புதிய வரி அமல்படுத்தப்பட்டது.
சரக்கு, சேவை வரியை அறிமுகம் செய்து, அமல்படுத்துவதற்கான விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இரவு 10.55 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வந்தார். அவரை வரவேற்று மைய மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
11 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, சரக்கு, சேவை வரி பற்றி விளக்கி பேசினார்.
அவர் பேசி முடித்ததும் சரக்கு, சேவை வரி பற்றிய குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது.
அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். அப்போது சரக்கு, சேவை வரி பற்றியும், அதை அமல்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் பேசினார்.
11.45 மணிக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அவர் 15 நிமிடங்கள் பேசினார். அவர் பேசி முடித்ததும் சரியாக நள்ளிரவு 12 மணி ஆனதும், மணி அடித்து சரக்கு, சேவை வரி விதிப்பு முறை தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்தது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முறையில் இந்த புதிய வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எம்.பி.க்கள், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தலைவர்கள் இவ்விழாவை புறக்கணித்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com