திருச்சி, திருவெறும்பூர், பெல் ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவ, மாணவிகளும், திருச்சி ஷைன் தொண்டு நிறுவனமும் இணைந்து ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரிக்கும் விழா பெல் ஆர்.எஸ்.கே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
நாடு முழுவதும் தற்போதைய சூழ்நிலையில் மரம் வளர்ப்பது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும் மரத்திலிருந்து விழும் விதைகளை சேகரித்து மண், உரம் போன்றவற்றை கலந்து விதை பந்துகள் தயாரித்து அதன் மூலம் மரம் வளர்ப்பது மற்றும் மரம் வளர்க்க மக்களை தூண்டும் நோக்கத்தோடு இப்பணி நடைப்பெறுகிறது.
இவ்விழாவில் பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விதை பந்து தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இவ்விழாவிற்கு ஆர்.எஸ்.கே. பள்ளி நிறுவனர் பாப்பன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மாரியப்பன், பெல் துணை தலைமை பாதுகாப்பு அலுவலர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி, திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் அமுதவள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி பேசியதாவது,
விதை பந்துகள் மூலமாக தற்போது தயாரிக்கப்படும் விதைகளில் வனத்தில் விதைப்பது எல்லாம் மரங்களாக வரும். ஆனால், மற்ற இடங்களில் விதைக்கப்படும் விதைகள் சில முளைக்காமலும் பாதியில் அழிந்து போவதாகவும் இருக்க கூடாது. சுற்று சூழல் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் இன்று தயாரிக்கும் விதை பந்துகள் நாளை அது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஷைன் அமைப்பின் “முளைத்தால் மரம்; இல்லை என்றால் உரம்” என்ற நம்பிக்கைய நான் ஏற்கவில்லை. அனைத்து விதைகளும் முளைத்து மரங்களாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.
மரம் நடுவது என்பது ஒருவன் மனித குளத்திற்கு செய்யும் சேவையாகும். மனிதனின் உடல் நலம் காப்பதில் மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்படும் பருவநிலை மாற்றத்திற்கு காரணம் மரங்களை அளிப்பதுதான். மரம் நடும் பணியை பெயரளவு செய்யாமல் ஈடுப்பாட்டுடன் செய்ய வேண்டும். மரம் நட விரும்பினால் தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, வனத்துறை ஆகியோர் இலவசமாக மரகன்றுகளை தருகின்றனர். தற்போது சில திருமண விழாக்களில் பொது மக்களுக்கு மரகன்றுகளை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேப்போல் பிறந்த நாட்களிலும் ஒருவர் 5 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இவ்வாறு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேசினார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் மரங்களை நடவு செய்ததோடு மாணவ, மாணவிகள் விதை பந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம், திருவெறும்பூர் பகுதியில் அதிக அளவில் மணல் திருட்டு நடப்பது குறித்து கேட்டதற்கு, அது பற்றி இங்கு கேட்க வேண்டாம் என்று கூறியதோடு, நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.
இந்த விதை பந்து தயாரிக்கும் விழாவில் ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 3 ஆயிரம் பேரும் குழுக்களாக பிரிந்து விதை பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இவர்கள் தயாரிக்கும் விதை பந்துகள் அனைத்தும் பருவழை பெய்ய தொடங்கியதும் நெடுஞ்சாலை ஓரங்களிலும், காடுகளிலும், மலைச்சார்ந்த பகுதிகளிலும் வீச திட்டமிட்டுள்ளதாக ஷைன் திருச்சி குழுவினர் தெரிவித்தனர்.
முன்னதாக ஷைன் திருச்சி அமைப்பை சேர்ந்த கிருத்திகா வரவேற்றார். நேதாஜி இளவரசன் நன்றி கூறினார்.
-ஆர்.சிராசுதீன்.