திருச்சி, திருவெறும்பூர் அருகே செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி கேண்டினுக்கு தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் கழிவுகள், மாநகராட்சி குப்பை தொட்டி அருகே ரோட்டில் மூட்டை, மூட்டையாக கொட்டுவதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி விடுதி வசதியுடன் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் தேவைக்காக பள்ளியில் கேண்டின் உள்ளது.
அந்த கேண்டினுக்கு தேவையான உணவு பொருட்கள், நொருக்கு தீனிகள், திருவெறும்பூர் காத்தம்மன் கோவில் அருகே உள்ள இந்திரா நகரில் உணவு பொருட்கள் தயாரிக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமானதாகும்.
அந்த உணவு தயாரிக்கும் கிடங்கிலும், பள்ளியில் உள்ள கேண்டீனிலும் தேங்கும் கழிவுப் பொருட்களை பள்ளி நிர்வாகம் வேனில் ஏற்றி வந்து திருச்சி மாநகராட்சி 64-வது வார்டுக்கு உட்பட்ட மஹாலெட்சுமி நகர் பகுதியில் மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து சாலை ஓரம் போட்டு செல்கின்றனர். அதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் பொது மக்கள் அந்தப் பகுதியில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும், அந்தப் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் அந்த குப்பைகளில் உணவு தேடுவதால், சாலைகளில் உணவு கழிவு பொருட்கள் சிதறி விடுகிறது. அந்தப் பகுதியில் சுற்றி திரியும் ஆடு, மாடுகள் அந்த கழிவுப் பொருட்களை சாப்பிடுகிறது. அப்போது கழிவு பொருட்களில் உள்ள பிளாஷ்டிக் பைகளையும், பேப்பர்களையும் சாப்பிடுவதால் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகிறது.
மேலும், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் தினமும் வந்து குப்பைகளை அள்ளாமல் வாரத்திற்கு ஒரு முறை வருவதே பெரிய விசயமாக உள்ளது. அதனால் பொது மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அந்த இடங்களில் கழிவு பொருட்களை கொட்டும் போது, பொதுமக்கள் அவர்களை கொட்ட விடாமல் விரட்டி விடுகின்றனர். அதனால் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.
தூய்மையை பற்றி மாணாக்கர்களுக்கு போதிக்கும் பள்ளி நிர்வாகம்; உணவு பொருட்களின் கழிவுகளை சாலையில் வீசியெறிவது எந்த வகையில் நியாயம்?
எனவே, சம்மந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் இதை தடுத்து நிறுத்துவார்களா? (அல்லது) வழக்கம் போலவே மௌனமாக இருப்பார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்.
-ஆர்.சிராசுதீன்.