மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு, தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் அனுமதி வழங்கக்கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்ப அனுமதிகோரி, மத்திய நீர்வள ஆணைத்தை அணுகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
காவிரி விவகாரம் முற்றிலுமாக முடியும் வரை மேகதாது திட்டத்திற்கோ அல்லது காவிரியில் மேற்கொள்ளப்படும் வேறு எந்தத் திட்டத்திற்கோ, தொழில்நுட்ப, பொருளாதார அனுமதியை வழங்கக்கூடாது என பிரதமருக்கு தாம் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி கடிதம் எழுதியுள்ளதை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி நினைவு கூர்ந்துள்ளார். இதே கோரிக்கையை கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பிரதமரிடம் அளித்த மனுவிலும் வலியுறுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மீறி, தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல், கர்நாடக அரசு மேகதாது திட்டத்திற்கான விரிவான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது துரதிஷ்டவசமானது.
எனவே, தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்ப, பொருளாதார ஒப்புதலை வழங்கக்கூடாது என மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய அமைச்சர் உமாபாரதியை, தமிழக முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com