திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க வலியுறுத்தி, கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்சியினர், சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
2011-ல் அணுகு சாலை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தும், அதன்பின் தமிழக அரசு 2014-ம் ஆண்டு ரூ.84.5 கோடி நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் இதற்கான பணியை தொடங்கவில்லை. இதை கண்டித்தும், அணுகு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வலியுறுத்தியும், பல்வேறு நலச் சங்கங்களின் சார்பில் 09.07.2017 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா தலைமையில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சர்வீஸ் ரோடு குறித்த வழக்குகள் விரைவில் முடிக்கப்பட்டு, அணுகு சாலை பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய வழக்கமான வாக்குறுதியை போராட்டக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று தோல்வியில் முடிந்தது.
திட்டமிட்டப்படி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-ஆர்.சிராசுதீன்.