இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் பிடித்து செல்லப்பட்ட 3 மீனவர்கள் உட்பட, அந்நாட்டில் உள்ள 53 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 144 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பிடித்து செல்வதும், எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் பெரும் அபராதத் தொகை விதிக்கும் சட்டம் இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்டிருப்பதும், தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினத்திலிருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பாக் நீரிணையில் மீன் பிடிக்கும் படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற மத்திய அரசு 200 கோடி ரூபாய் திட்டத்தை அனுமதித்துள்ளது. தமிழக அரசும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைக்க மூக்கையூர் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்றை அமைத்து வருவதையும் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசும், தமிழ்நாடு அரசும், மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கை அரசு ஆதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவது ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் உட்பட இலங்கையில் உள்ள 53 மீனவர்களையும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 144 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com