திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்குமலை பாரதிதாசன் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. அந்த பள்ளி 1956 ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியாக துவங்கப்பட்டது. பின்னர் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. இப்பள்ளியின் மூலம் துவாக்குடி வடக்கு மலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பள்ளியின் ஒரு கட்டிடம் பழுதடைந்து இருந்தது. அதனால் அந்த பள்ளி மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் அந்த கட்டிடத்திற்கு செல்வதற்கு அச்சமடைந்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டப் போது பள்ளியன் சுற்று சுவர் மீது அந்த கட்டிடம் விழுந்ததால், பள்ளியின் மதில் சுவரும் இடிந்து விழுந்தது. அதன்பிறகு அதிகாரிகள் பள்ளியின் மதில் சுவரை புதிதாக கட்டி கொடுக்கவில்லை.
அதனால் பள்ளி திறந்த வெளியில் உள்ளதால் பள்ளி கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், குடிமகன்களின் புகலிடமாகவும் மாறிவிட்டது. இதுக்குறித்து பள்ளி நிர்வாகமும், பொது மக்களும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இது நாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் 4 கட்டிடங்கள் உள்ளது. ஒவ்வொரு கட்டிடத்திலும் இரண்டு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
அதில் 5 மற்றும் 6-ஆம் வகுப்புகள் நடைப்பெறும் கட்டிடம் பழுதடைந்து மேற்கூறை சிமெண்ட் கூறைகள் பெயர்ந்து விழுகிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் அச்சத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இது சம்மந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு கடந்த ஏப்பரல் மாதம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் துவாக்குடி நகர பாரதிய ஜனதா கட்சியினருக்கு இது சம்மந்தமாக தகவல் கிடைத்ததும் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டதோடு, இது சம்மந்தமாக பாஜக மாவட்ட செயலாளர் ராஜராஜன் தலைமையில் பாஜக-வினர் திருச்சி கலெக்டரிடம் கடந்த 3-ம் தேதி புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (11.07.2017) பள்ளி நடந்து கொண்டிருந்தப்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூறை சிமெண்ட் கறை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவ, மாணவிகளும், ஆசிரியரும் தப்பினார்கள்.
இத்தகவல் பெற்றோர்களுக்கு கிடைத்ததும் பள்ளிக்கு படையெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
எனவே, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? (அல்லது) ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் வரை மௌனமாகவே இருப்பார்களா?
-ஆர்.சிராசுதீன்.