திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைப்பது ஜெயலலிதாவின் கோரிக்கையென கருதி நிறைவேற்ற தமிழக அரசு முன் வரவேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் நல்லகண்ணு பேச்சு.

b (4) a (4)

IMG_2560

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் 3டி அறிக்கையை உள்ளுர் பத்திரிகையில் வெளியிட்டு நிலத்தை கையப்படுத்த வலியுறுத்தி நடந்து வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 12-ம் நாளான இன்று மதியத்தோடு முடிவடைந்தது.

இத்தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ஆலோசனைக்குழ உறுப்பினர் நல்லகண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்று உரையாற்றினார்.

நீலகிரி கூடலூர் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள சாலை தான் 67 தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் அரியமங்கலம் பால்பண்ணை வரை சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாகும். இது கட்சி வேறுபாடு மறந்து அனைத்து கட்சியினரின் கருத்தாகும்.

தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் ஏன் விபத்துக்கள் நடக்கிறது என்று அதிகாரிகளும் அரசும் கண்டுபிடிக்கவில்லை. இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் தான் காரணம். அவர்கள் குடும்பம் பாதுக்காப்புடன் வாழ வேண்டும். மேலும், வளர்ச்சி என்பது எல்லோரும் வாழ்வதற்காக இருக்க வேண்டும். 

4 வழி சாலை வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 வழி சாலையாக மாற்றும் பணி தொடங்கியது. புதிய போக்குவரத்து வேண்டும். ஆனால், மக்களுக்கு அது இடையூறாக இருக்க கூடாது. காஷ்மீரையும் – கன்னியாகுமரியையும் இணைத்தவர்கள் பல ஊர்களை இரண்டாக்கி விட்டனர். இதைப் போக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கிறது. அந்த விபத்துக்கு காரணம் டாஸ்மாக் என்று கண்டு பிடிக்கபட்டது. அதனால்தான் உச்சநீதி மன்றம் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் உள்ள அரசு மதுப்பான கடைகளை 500 மீட்டர் தள்ளி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், கேரளாவில் 1 மீட்டர் தூரத்திலேயே சுத்தி சுத்தி வைத்து லாபம் பார்க்கின்றனர். லாபம் ஒன்றையே குறிகோளாக கொண்டு செயல்படுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் கொண்டு வந்து டாஸ்மாக் கடைகளை அமைக்கின்றனர். அதனை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தி வருவது வரவேற்கதக்கதாகும். போராடாமல் எதுவும் கிடைக்காது. அரசு குறுக்கு வழியில் செயல்படுத்த நினைப்பதை போராட நினைப்பவர்கள் போராடிதான் தடுக்க வேண்டும். அது நிகழ்ந்து விட்டது. திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை வரவேண்டியது நியாயமானது.

கன்னியாகுமரி பனங்குடி இணைப்பு சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டி 90 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். இச்சாலையில் இதுவரை 750 பேர் இறந்து விட்டனர். ஆயிரத்து 600 பேர் ஊனம் அடைந்துள்ளனர். வாகனங்களும் சேதமடைந்துள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஊராகும். அவரிடமும் போய் பேசிவிட்டோம் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

ஆனால், இங்கு 2009- ஆம் ஆண்டே உணர்ந்ததோடு மத்திய அரசுக்கு உணர்த்தியுள்ளீர்கள். அதனை ஒத்து கொண்டு 2014- ஆம் ஆண்டு 84 கோடி நிதியை ஒதுக்கி கொடுத்துள்ளது.

தற்போது இந்த சாலையில் 90 ஏக்கர் நிலப்பரப்பு மத்திய மாநில அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. அதனை முதலில் கையகப்படுத்த வேண்டும். 2014-ஆம் ஆண்டிலேயே அதை செய்திருந்தால் இதுப்போன்ற பிரச்சனை வந்திருக்காது. இனியாவது அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். இது முதல் வெற்றியாகும். அதனை தொடர்ந்து செயல்படுத்துவது அரசின் கடமையாகும். 3 ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் செய்யவில்லை. 

தற்போது சர்வீஸ் சாலை அமைப்பதற்கு நிதி வந்து பேசாமல் வங்கியில் உள்ளது. அதற்கு என்ன வட்டி கிடைத்துவிடும்? தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் நெடுஞ்சாலை அமைச்சராக இருந்தவர்.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதை ஏன் மறுக்கின்றனர்? அதற்கு என்ன காரணம்? காலம் தாழ்த்தினால் செலவுதான் அதிகமாகும். உயர்நீதி மன்றத்திலும் வழக்கு முடிந்து விட்டது. பொதுப்பணித்துறையினர் வேலையை தொடங்க வேண்டும்.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 3 முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், சுற்றுலாத் தளங்கள் நிறைந்த பகுதியாகவும், வழிப்பாட்டு தளங்களான வேளாங்கண்ணி திருவிழா மற்றும் மாகாமகம் விழா இவற்றை நினைவிற்கொள்ளவேண்டும். இந்த கோரிக்கையை ஜெயலலிதாவின் கோரிக்கையென கருதி நிறைவேற்ற தமிழக அரசு முன் வரவேண்டும்.

தேர்தல் வரை காத்திருக்காமல் மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இவர்கள் நடத்தும் சாலை மறியில் உள்ளிட்ட அனைத்து விதமான போராட்டங்களிலும் நான் கலந்து கொள்வேன். இவ்வாறு நல்லக்கண்ணு கூறினார். 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் கணேசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன், திமுக காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் மற்றும் நகர் நலச்சங்கத்தினர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் வரவேற்றார். நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

-ஆர்.சிராசுதீன்.