திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், திருச்சி – கல்லணை சாலையில் திருவளர்சோலை பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டுவருகிறது. ஆனால், ஆன்லைன் பதிவில் பனையக்குறிச்சி என்ற கிராமத்தில் மணல் குவாரி இயங்குவதாக தகவல் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், பனையக்குறிச்சி கிராமத்தில் அரசு மணல் குவாரி செயல்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை 05.00 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் அருகில் சஞ்சிவி நகர் எதிரில் மணல் ஏற்றி வந்த 10 மணல் லாரிகளை, திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மணல் ஏற்றிவந்த லாரிகளை வழிமறித்து சிறைப்பிடித்தனர்.
ஒரு லாரியில் ஒரு நடைக்கு 3 யூனிட் மணல் மட்டும் தான் ஏற்ற வேண்டும். அதற்கு ஆன்லைன் மூலம் முறையாக பதிவு செய்ய வேண்டும். ஆனால், சிறைபிடிக்கப்பட்ட ஒவ்வொரு மணல் லாரியிலும் சுமார் 11 யூனிட் மணல் இருந்தது. அந்த லாரிகள் மணல் அள்ளுவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவில்லை.
மேலும், லாரியின் முன்புறம் Tiruchy to Madurai PWD என்ற வாசகம் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. ஆக, அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் இந்த மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது என்பது இதன் மூலம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் மற்றும் அப்பகுதி பொது மக்களும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், லாரிகளை பறிமுதல் செய்யவோ அல்லது அபராதம் விதிக்கவோ அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் கொதிப்படைந்த பொது மக்கள், “மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்களை துரத்தி துரத்திப்பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் காவல் துறையினர், இப்படி கையும் களவுமாக பிடிக்கப்பட்ட மணல் லாரிகளை பறிமுதல் செய்வதற்கு தங்குவது ஏன்? லாரிகளை பறிமுதல் செய்யவில்லை என்றால், நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம்” என்று கூறியதால், வேறு வழியின்றி அந்த 10 லாரிகளையும் பறிமுதல் செய்து, திருச்சி சஞ்சீவி நகர், ஓயாமரி சுடுகாடு அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் மற்றும் விற்பனையை முறைபடுத்துவதற்காகவும், தமிழக அரசு ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை துவக்கியது. ஆனால், அதிகாரிகளின் துணையுடன் இதுபோன்று மணல் கடத்தல் பகிரங்கமாகவே நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
மேற்படி, பறிமுதல் செய்யப்பட்ட லாரி உரிமையாளர்கள் யார்? இந்த மணல் கடத்தல் யாருக்காக நடைபெற்றது? என்பது குறித்து தமிழக அரசு உடனடியாக உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை வேண்டும். இது போன்ற முறைகேடுகள் அனைத்து அரசு மணல் குவாரிகளிலும் நடைபெறுகிறதா? என்பதை முறையாக கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக அரசிற்கு இதன் மூலம் மிகப்பெரிய களங்கம் ஏற்படும்.
-கே.பி. சுகுமார்.