சமூக விரோதிகளின் சதி; வனத்துறையினரின் அலட்சியம்; தீயணைப்பு துறையினரின் தாமதம்!- வெந்து தணிந்தது காடு!- தீயில் கருகிய வன உயிரினங்கள்..!

20170727_17462520170727_174637 20170727_17464520170727_174628 20170727_174631 20170727_174634

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருச்சி- கல்லணை சாலையில் காவிரி ஆற்றின் வலது கரையில் புத்தாபுரம் முதல் வேங்கூர் பூசைப்படித்துறை வரை வனத்துறைக்கு சொந்தமான 83.28 ஹெக்டேர் பரப்பளவு காப்பு காடுகள் உள்ளது.

இதில் இந்தியாவின் தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மேலும், காட்டுப்பூனை, கீரி, எறும்பு தின்னி, குரங்கு, நரி, உடும்பு, பாம்பு மற்றும் அனைத்து வகையான பறவைகளும், ஏராளமான வன உயிரினங்களும் இப்பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன.

இந்த வனப்பகுதி திருச்சி- கல்லணை சாலை ஓரமாக இருப்பதாலும், அப்பகுதி முழுவதும் திறந்த வெளியாக இருப்பதாலும் சமூக விரோதிகளின் புகலிடமாக அமைந்துள்ளது. அவ்வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நடமாடும் நபர்கள் பயன்படுத்திவிட்டு நெருப்போடு வீசியெறியும் பீடி, சிகரெட் மற்றும் சுருட்டு துண்டுகளால் வனப் பகுதியில் அடிக்கடி தீ பற்றி கொள்கிறது. இதனால் ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பன போன்ற உயிரினங்களுக்கு பெருத்த உயிர் சேதமும் காயமும் ஏற்படுகிறது.

இதுக்குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும், இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், திருச்சி – கல்லணை சாலையில் புத்தாபுரத்திற்கும் – வேங்கூர் பூசப்படித்துறைக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் இன்று (27.07.2017) மாலை 04.30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அப்பகுதிமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வாகனம் வேறு இடத்திற்கு சென்றதால், தீயணைப்பு வாகனம் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தது. இதற்குள் வனப்பகுதியில் காற்றின் வேகம் மற்றும் வெயிலின் தாக்கம்  காரணமாக தீ வேகமாக பரவியதில் அப்பகுதியில் இருந்த தைல மரம், பனை மரம் இதர மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகியது. தாமதமாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

இதுப்போன்ற தீ விபத்துக்களில் இருந்து வனத்தையும், வன உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டுமானால் அவ்வனப்பகுதி முழுவதும் அந்நியர்கள் யாரும் அத்துமீறி நுழையாதபடி கம்பி வேலிகள் அமைத்து வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும். இல்லையென்றால், இதுப்போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

-கே.பி. சுகுமார்.