பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட கூட்டணி ஆட்சியமைத்து இருந்தது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.
இந்நிலையில் ரயில்வே ஓட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை நேற்று முன்தினம் இரவு திடீரென ராஜினாமா செய்தார். மாநில பொறுப்பு ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில் நிதிஷ் குமாருக்கு, பா.ஜ.க. ஆதரவு அளிக்க முன்வந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை பெற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, மாநிலத்தில் அரசை அமைக்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலை பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷில் குமாரும் பதவி ஏற்றனர்.
புதிதாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், சட்டசபையில் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி பீகார் சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று (28.07.2017) நடைபெற்றது. இதில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 108 வாக்குகளும் கிடைத்தன.
நிதிஷ் குமாரின் குடுமி தற்போது பா.ஜ.க. கையில் சிக்கியுள்ளது. இனி பீகார் மக்களுக்கு உண்மையாக இருப்பாரா? இல்லை வெறும் பொம்மையாக இருப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com