தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி மற்றும் அவரது கணவர் விஜயகுமார் ஆகியோர் 31.07.2017 அன்று நேரில் சந்தித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக் குறித்து பல்வேறு சந்தேகங்களும், சர்சைகளும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி மற்றும் அவரது கணவர் விஜயகுமார் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு அனுமதி அளித்திருப்பது, தமிழக மக்களிடத்திலும், அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்காக, தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதற்கு, தமிழக அரசின் தலைமைச் செயலாளாரிடமும் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்திலும் நேரம் கேட்டு, பதிலுக்காக பல வாரங்களாக, பல மாதங்களாக ஏராளமானோர் காத்திருக்கும்போது, அவர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இதுப்போன்ற சர்சைக்குரிய நபர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு எப்படி மனது வந்தது?
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் குறித்து தமிழக மக்களிடத்திலும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியிலும் இருக்கும் சந்தேகம் முழுமையாக, வெளிப்படையாக தீர்க்கப்படும்வரை, அப்பல்லோ மருத்துவமனைகளின் நிர்வாகிகள் யாரையும் மரியாதை நிமித்தமாகவோ அல்லது அவசர நிமித்தமாகவோ நேரில் சந்திப்பதை தமிழக முதலமைச்சர் முற்றாக தவிர்க்க வேண்டும். அது தான் அவருக்கும் நல்லது; அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கும் நல்லது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com