சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மக்கள் பாதை இயக்க அறிமுக கூட்டம் ரெட்ரீட் சலேசியன் கல்லூரியில் இன்று நடைப்பெற்றது. ரெட்ரீட் கல்லூரி ரெக்டர் ஹோப் அனைவரையும் வரவேற்றார். இளைஞர்கள் மற்றும் கிறிஸ்துவ துறவிகள் கல்லூரியின் மாணவர்களிடையே சகாயம் ஐ.ஏ.எஸ். சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக கூட்டத்தில் கலந்துக்கொண்ட இளைஞர்கள் சகாயத்திடம் நேர்மையாக இருப்பதற்கு தங்களை எவ்வாறு தயார் செய்து கொண்டீர்கள், துறவிகள் மக்கள் சமுதாய தொண்டு எவ்வாறு ஆற்றுவது உள்ளிட்ட தங்கள் சந்தேகங்களை கேட்டனர்.
கூட்டத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேசியதாவது:
“மக்கள் பாதை இயக்கத்தில் தற்போது இரண்டரை இலட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாகவும், 12 ஆயிரம் இளைஞர்கள் களத்தில் இறங்கியும் செயல்பட்டு வருகின்றனர். பலரும் என்னை அரசியலுக்கு வர சொல்லி அழைக்கின்றனர். நாம் என்றைக்கு நேர்மையாக பேசுகின்றேனோ அப்போதே அரசியலில் இருக்கிறேன். பிரச்சனை என்னவென்றால் அது தேர்தல் அரசியலா என்பதுதான் கேள்வி. நான் மாவட்ட ஆட்சி தலைவராக ஆசைப்பட்டுள்ளேனே தவிர, மாநில ஆட்சித் தலைவராக ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை.
அரசியல், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் நேர்மையாக இல்லை என சொன்னால், கோளாறு அரசியலில் இல்லை சமூகத்தில்தான் உள்ளது. ஏனெனில், இவர்கள் சமூகத்தில் இருந்து வந்தவர்கள்.
எனவே, தூய்மைப்படுத்த வேண்டியவர்கள், துவங்க வேண்டிய இடம் சமூகமாக கருதினேன். இதனால் அன்று என்னிடம் வந்த இளைஞர்களிடம் சமூகம், கிராமம், எளிய விவசாயிகளை நோக்கி செல்லுங்கள் என கூறினேன்.
சமூகத்தை தூய்மையாக்கி விட்டால் சமூகத்தில் ஒரு அங்கமாக உள்ள அரசியலும் தானாகவே தூய்மையாகி விடும். நான் இவ்வளவு நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பதற்கு காரணம் எனது தாய் சவரியம்மாள் என்னுடைய சிறு வயதில் என் உடலின் உதிரத்தில் நேர்மை வித்துகளை ஊன்றியுள்ளார். இதனால் என் சித்தம் மட்டுமல்லாமல் இரத்தத்திலும் நேர்மை ஊறியிருக்கிறது.
நாம் மக்கள் பாதை இயக்கத்தினால் செய்வது சமுதாய அரசியல். நாம் அனைவருமே இந்த சமுதாயத்தின் வார்ப்புகள். நாம் கற்றுக்கொண்டதை இந்த சமுதாயத்திற்கு திருப்பி கொடுப்பதே சரியானதாக இருக்கும். இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ். கூறினார்.
இந்த கூட்டத்தின்போது ஏற்காடு இளைஞர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மக்கள் பாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
-நவீன் குமார்.