சசிகலா, டிடிவி.தினகரனை நம்பி இந்த ஆட்சியும் இல்லை; கட்சியும் இல்லை என்று தற்போது பகிரங்கமாகவே வீரவசனம் பேசி வரும் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் தைரியத்தையும், துணிச்சலையும் அவரது ஆதரவாளர்களும், அப்பாவி அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் உண்மை என்று நம்பி அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதே அமைச்சர் ஜெயக்குமார்தான் சசிகலாவை அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும், சசிகலாவின் அக்கா மகன் டிடிவி.தினகரனை அ.இ.அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமனம் செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்திடம் 15.03.2017 அன்று எழுத்துப்பூர்வமாக வாக்கு மூலம் அளித்து உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார்.
இதோ அதற்கான ஆதாரம்:
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கும், கட்சிக்கும் சசிகலா தான் நெருங்கிய ஆலோசகராக இருந்தார் என்றும், பெரும்பான்மையான சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவிற்குதான் இருப்பதாகவும் அந்த உறுதிமொழி பத்திரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்து இன்னும் 5 மாதங்கள் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த அந்தர் பல்டிக்கு (மனமாற்றத்திற்கு) காரணம் என்ன? அதை வெளிப்படையாக இதுவரை அறிவிக்காதது ஏன்? யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்?
இப்போது பேசுவதுதான் உண்மையான நிலைப்பாடு என்றால், இந்திய தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்கு மூலம் பொய்யானதா?
இதற்கான உண்மையான காரணத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து, 15.03.2017 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த உறுதி மொழி பத்திரத்தை அமைச்சர் ஜெயக்குமார் திரும்ப பெறுவாரா? (அல்லது) வழக்கம் போலவே இந்திய தேர்தல் ஆணையத்தையும், தமிழக மக்களையும் முட்டாளாக்க போகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com