புது தில்லியில் இன்று (ஆகஸ்ட் 07, 2017) நடைப்பெற்ற ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோதியின் மணிக்கட்டில் ‘ராக்கி’ எனும் புனிதக்கயிற்றை கட்டி குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார்.
இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீய சக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார்.
அவர் அளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது, அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார்.
திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷா பந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.
ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப் பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுனுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன், ராணியையும் அவரது ராஜ்ஜியத்தையும் காப்பாற்ற முற்பட்டார். ஆனால், அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.
கி.மு.326-ல் மாவீரர் அலெக்ஸ்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து இந்தியாவின் ஏறக்குறைய வடக்குப் பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிய பின்னர், போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டரின் மனைவி ரோக்ஷனா, போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று, போரஸ் மன்னருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும், கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலெக்ஸ்சாண்டரை போரஸ் மன்னர் விட்டு விட்டார்.
இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதற்கு கதை கதையாக சொல்லிக்கொண்டு போகலாம்.
தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.
அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பண்டிகை என்று கூறுவதைவிட, சகோதரத்தத்துவத்தை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சி “சமத்துவப் பண்டிகை” என்று கூறுவதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com