பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 41 மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் கப்பல்களை கொண்டு மோதி அவர்களை கைது செய்துள்ளனர்.
இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி தளத்திலிருந்து நேற்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். இரு சம்பவங்களிலும் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 12 மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்தில் அண்மையில் பிரதமர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீனவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்புப் படகுகளாக மாற்றும் தொடக்க விழா நடைபெற்றிருந்த நிலையில், தமிழக மீனவர்கள் இவ்வாறு ஒட்டு மொத்தமாக பிடித்துச்செல்லப்பட்டிருப்பதும், தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பிரதமர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இலங்கை அரசுக்கு, இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். பிடித்துச் செல்லப்பட்ட 49 மீனவர்கள் உள்ளிட்ட இலங்கை சிறைகளில் வாடிவரும் 64 மீனவர்களையும், அந்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 125 படகுகளையும் உடனடியாக மீட்க வெளியுறவு அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com