நாடு முழுவதும் 71-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோதி தேசியக் கொடியை ஏற்றினார்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதைச் செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோதிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தரபிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது.
சவால்களை கடந்து நாம் ஒற்றுமையுடன் இருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. இயற்கை பேரிடர்களால் சில நேரங்களில் இன்னலை சந்திப்பது வேதனை. ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள்.
புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 5 ஆண்டுகள் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள்; பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது.
தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் மற்றும் நாட்டை கொள்ளையடித்தவர்கள் இன்று நிம்மதியாக தூங்க முடியவில்லை.
ஆதார் திட்டம் மூலமாக ஊழல் ஒழியும், வெளிப்படைத் தன்மை ஏற்படும். தொழில்நுட்பம் மூலமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அரசுத் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. திட்டம் தாமதமானால் ஏழை மக்களே பாதிப்புக்கு ஆளாகின்றனர். கூட்டாட்சி முறையால் உதய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பான பலனை தந்துள்ளன. அரசும் நாட்டு மக்களும் தத்தமது கடமைகளை சிறப்பாக செய்வது அவசியம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
துன்பங்கள் பல வரினும் விவசாயிகள் கடும் உழைப்பினால் சாதனைகளையே படைத்து வருகின்றனர். பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் 6.75 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர்.
வேளாண் துறை வளர்ச்சிக்காக நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொழில்நுட்ப மாற்றத்தால் வேலைவாய்ப்பிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மங்கள்யான் மூலம் செவ்வாய் கிரகத்தை 9 மாதங்களில் அடைந்தது இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு உதாரணம். 9 மாதத்தில் செவ்வாய் கிரகத்தை பிடித்த நாம், ரயில் பாதையை முடிக்க இயலவில்லை. கடந்த 42 ஆண்டுகளாக ரயில் திட்டப் பணிகளை முடிக்க முடியவில்லை.
முத்தலாக முறையை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன். மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.
மகாத்மாவும், புத்தரும் பிறந்த இந்திய மண்ணில் வன்முறை, வகுப்புவாதத்திற்கு இடமில்லை. புதிய திசையை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறோம். நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் நடைபோடலாம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.