கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் நேற்று இரவு அவரது வீட்டிற்கு முன்பு தலைகவசம் அணிந்த அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் பயங்கரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் மற்றும் மூத்த போலிஸ் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்தினார்.
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் என் நெருங்கிய நண்பர். அவரது தந்தை லங்கேஷின் மூலம் அவர் ஏற்கனவே என்னை அறிந்திருக்கிறார். அவரது படுகொலை எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கவுரி லங்கேஷ் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட முழு சம்பவமும் பதிவாகி உள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், லங்கேஷின் செல்போனில் அதிகமான ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் கவுரி லங்கேஷ் சகோதரர் இந்திரஜித் லங்கேஷ் கூறிஉள்ளார்.
சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை கர்நாடக போலிசார் பாதுகாப்பாக கைப்பற்றி உள்ளனர். அதை தன் முன்பாகவும், தன்னுடைய தாயார் முன்பாகவும் திறக்க வேண்டும் என கவுரி லங்கேஷ் சகோதரர் இந்திரஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை செயலர் ராஜீவ் கௌபாவிடம் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் அறிக்கையை கேட்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com