சசிகலா கணவர் நடராஜனுக்கு கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

natarajan

சசிகலா கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை.

தற்போது அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பதற்காக, லண்டன் கிங் இன்ஸ்டிடியூட் (King Institute) மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், உலக புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான முகம்மது ரீலா சென்னை வந்துள்ளார்.

நடராஜனுக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கின்றது. அதற்கான ஆயத்த பணிகளில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை 21 ஏக்கர் பரப்பளவில் 1000- க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட உலக புகழ் பெற்ற மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக  புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் முகம்மது ரீலா.

உலக புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் முகம்மது ரீலா.

யார் இந்த முகம்மது ரீலா?

மருத்துவர் முகம்மது ரீலா. உலகின் முதன்மையான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். இவர் 5 நாள் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து 2000- ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனைப் படைத்தவர். இதுவரை இவர் 3000-க்கும் அதிகமான கல்லீரல் மாற்று சிகிச்சைகளை நிகழ்த்தியுள்ளார்.

இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர், மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் கிராமத்தில் பிறந்தவர். சென்னையிலுள்ள கலஷேத்திராவில் பள்ளி படிப்பை முடித்து, 1980-ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து MBBS மற்றும் எம்.எஸ்., பட்டம் பெற்றார். அதன் பிறகு, 1986- ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்திற்குச் சென்றார். எடின்பர்க்கில் இன்னொரு எம்.எஸ்., பட்டம் பெற்றார். அதன் பின்னர், 1988-ல் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களில் ஒருவராக பணியாற்றினார். மேலும், இங்கிலாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார்.

லண்டனின் புகழ் பெற்ற கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில், 1991-ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் சேர்ந்தார். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில், அவர் பிளவு கல்லீரல் மாற்று சிகிச்சை நுட்பத்தை முன்னோடியாக அறிமுகப்படுத்தினார். துணை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய மருத்துவ நிபுணராக இருந்து வருகிறார்.

சென்னை குளோபல் மருத்துவமனையில் ஒரு வருடத்திற்கு 60 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறார். தெற்காசியாவில் மிகப்பெரிய குழந்தை மருத்துவ திட்டமாக 250-க்கும் மேற்பட்ட பீடியாட்ரிக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.

‘நன்கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டம்’- ஒன்றை அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இப்போது சென்னை கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனையுடன் இணைந்து, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இவர், இங்கிலாந்தில் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இவர்தான் தற்போது சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த முகம்மது ரீலா, இன்று உலக புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணராக புகழ் பெற்று விளங்குகிறார்.  

இவர் அந்த  காலத்தில் நீட் மாதிரி (NEET-NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எந்த தகுதி தேர்வும் எழுதி மருத்துவ கல்லூரியில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com