உலக அமைதிக்கான நோபில் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார்.
கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறையிலிருந்து “பாரத யாத்திரை” துவங்கியிருக்கும் உலக அமைதிக்கான நோபில் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி 35 வருடங்களுக்கும் மேலாக “குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நடத்தும் இந்த யாத்திரை இந்திய நாட்டின் பன்முகத்தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.
“குழந்தைகள் மீதான அனைத்து வகை குற்றங்களுக்கும் எதிரான போர்” என்ற நோக்கத்துடன் துவங்கியுள்ள “பாரத யாத்திரையின்” வழி நெடுகிலும் “குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்” என்ற ஐந்து முழக்கங்களை ஒரு கோடி மக்கள் உறுதிமொழியாக எடுக்க வைக்கப் போகிறார்.
“கல்வி பெறுவது” குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி கண்ட கைலாஷ் சத்யார்த்தி “கன்னியாகுமரி முதல் டெல்லி” வரை நடைபெறும் இந்த பாரத யாத்திரை மூலமும் வெற்றி பெறுவார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, “உலகமே குழந்தைகளின் நண்பனாக இருக்க வேண்டும்” என்ற அவரது உயர்ந்த நோக்கம் பாரத யாத்திரையின் மூலம் நிறைவேறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.