திருவெறும்பூர் அருகே அரளை கற்களை ஏற்றி வந்த லாரியின் பாரம் தாங்காமல் 50 ஆண்டுகள் பழமையான பாலம் கீழே இடிந்து விழுந்தது! போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் தவிப்பு!

S3920001

S3920004

S3920020திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளியூர் கிராமத்தில், கிளியூருக்கும்மாதா கோவில் தெருவிற்கும் இடையே வடிகால் வாய்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகும்.  இந்த பாலத்தின் வழியாக மாதாகோவில் தெருவில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  சென்று வந்துக் கொண்டிருந்தனர்.

மேலும், இந்த பாலத்தின் வழியாகதான் மாதாகோவில் தெருவில் வசித்து வரும் பள்ளிக் குழந்தைகள், கிளியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில், மாதா கோவில் தெருவில் தனிநபர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அரளை கற்களை ஏற்றி கொண்டு வந்தப்போதுதான் லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அரளை கற்களை ஏற்றி வந்த லாரியும் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும், காவிரி ஆற்றில் பாசனத்திற்காக நாளை (02.10.2017) மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னும் 4 நாட்களில் தண்ணீர் கல்லணையை வந்தடையும். கல்லணைக்கு வரும் தண்ணீர், கல்லணை கால்வாய் வழியாக இந்த வடிகால் வாய்காலை வந்தடையும். மாதா கோவில் தெருவில் வசித்து வரும் மக்கள் அவசர தேவைகளுக்காக வெளியில் வரமுடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்படும்.

எனவே, நிரந்தர பாலம் அமைக்கும் வரை, இப்பகுதி மக்கள் வழக்கம் போல் வந்து செல்வதற்கு, தற்காலிக பாலம் அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகமும் மற்றும் பொதுப்பணித்துறையும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அப்பகுதி மக்கள் நிம்மதியடைவார்கள்.

 -ஆர்.சிராசுதீன்.