குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்காக 50,128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகை சீட்டு அளவு அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டை விட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 102 வாக்குப்பதிவு மையங்கள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும். வேட்புமனு தாக்கல், வேட்பாளர் முதல் அனைத்தும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
குஜராத்தில் தேர்தல் நடைமுறை தற்போது முதல் அமலுக்கு வருகிறது. வேட்பாளர் ஒருவருக்கான தேர்தல் செலவு ரூ.28 லட்சம் ஆகும். தேர்தல் செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் முடிவடைந்த 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் செலவு கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பெருத்தப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தேர்தல் கண்காணிப்பு பணிக்காக அண்டை மாநில போலீசார் பயன்படுத்தப்படுவார்கள்.
குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.
முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9 ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். வேட்புமனு தாக்கல் நவம்பர் 14 துவங்கி நவம்பர் 21 வரை நடைபெறும். நவம்பர் 22 ம் தேதி வேட்புமனுக்கள் சரிபார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற நவம்பர் 24 கடைசி தேதியாகும்.
இரண்டாம் கட்டமாக டிசம்பர் 14 ம் தேதி 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் நவம்பர் 20 ம் தேதி துவங்கி நவம்பர் 27 வரை நடக்கும். வேட்புமனுக்கள் நவம்பர் 28 ல் பரிசீலிக்கப்படும். மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 29 கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். PN80_25102017
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் உண்மை நகல்.
News
October 25, 2017 3:46 pm