திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகள் சுகாதார சீர்கேட்டுடன் இருப்பதால், காவலர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தற்போது துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவெறும்பூர் காவல் நிலைய கழிவறை தண்ணீர் (செப்டிடேங்) நிரம்பி, கழிவு நீர் திறந்த வெளியில் கால்வாய் போல் ஓடுகிறது.
மேலும், திருவெறும்பூர் காவல்நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் சுமார் 100 குடும்பங்கள் இருக்கிறது. அந்த குடியிருப்புகளுக்கான கழிவு நீர் செப்டிக் டேங் இரண்டு உள்ளது. ஆனால், அந்த செப்டிக் டேங்குகளின் அளவு சிறியதாக இருப்பதால், 10 நாட்களுக்கு ஒரு முறை நிரம்பி வழிந்து குடியிருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதுக்குறித்து சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், செப்டிக் டேங்கில் இருந்து வழியும் தண்ணீர், கழிவு நீர் கால்வாயில் ஓடுவதற்கு ஜேசிபி இயந்திரத்தை வைத்து கழிவு நீர் வாய்காலை பறித்து விட்டனர். அதுவும் பயனளிக்கவில்லை. தற்போது காவலர் குடியிருப்பில் உள்ள செப்டிக்டேங் கழிவு நீர் வழிந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனால் அந்த காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், சில காவலர்கள் இதுபோல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அது வெளியில் தெரிய கூடாது என்பதற்காக, அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுகாதார சீர்கேடு எதுவும் இல்லை என்று, திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு, சுகாதாரதுறையினர் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
-ஆர்.சிராசுதீன்.
-கே.பி.சுகுமார்.