மத்திய பிரதேசம் மாநிலம், சட்னா மாவட்டம், சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி பெற்றுள்ளார்.
சித்ரகூட் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரசை சேர்ந்த பிரேம்சிங் கடந்த மே மாதம் காலமானார். இந்நிலையில், சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 9-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் நிலான்ஷு சதுர்வேதி, பா.ஜ.க. சார்பில் சங்கர்லால் திரிபாதி உள்பட மொத்தம் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 2 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். 11 நபர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக 12 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தான் போட்டி பலமாக இருந்தது.
09.11.2017 வியாழக்கிழமை வாக்கு பதிவு நடைப்பெற்றது. மொத்தம் 65.07 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி சட்னா மாவட்டத்தில் இன்று (12.11.2017) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி பா.ஜ.க. வேட்பாளர் சங்கர்லால் திரிவேதியை விட முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் பா.ஜ.க. வேட்பாளரை விட 14,133 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி பெற்றுள்ளார்.
சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதி காங்கிரசின் கோட்டை என்பதை அத்தொகுதி மக்கள் இந்த இடைத்தேர்தலின் மூலம் மீண்டும் நிரூப்பித்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் வேளையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது, மத்திய பிரதேச பா.ஜ.க. அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.